சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை 3.45 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் சோதனை:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் NIA அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் NIA அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உள்ளவர்கள் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடலூரில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் அமைப்பின் மாவட்டத் தலைவர் பியாஸ் அகமதையும், தேனி மாவட்டத்தில் பிஎஃப் இன் மதுரை மாவட்ட செயலாளர் யாசர் அராபாத் என்பவரை பிடித்து சென்றுள்ளனர். கோவை கரும்புக்கடை பகுதியில் PFI தேசிய செயற் குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரது வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புரசைவாக்கத்தில் உள்ள மாநில தலைமை அலுவலகம் மூக்காத்தால் தெருவில் உள்ளது. மூன்றாவது தளத்தில் உள்ள அலுவலகத்தில் 10ககும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் அவர்களது நிர்வாகிகளும் உள்ளனர் . அவர்களிடம் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டல தலைவர் பக்கரி அகமது தலைமையில் 100ககும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் சிஆர்பிஎப் வீரர்களும் 20க்கும் மேற்பட்டவர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
மதுரையில் நெல்பேட்டை பகுதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் யூசுப் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பிஐ கட்சியினர. மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதேபோன்று மதுரை மாநகர் பகுதியில் வில்லாபுரம், கோமதிபுரம் , கோரிப்பாளையம், குலமங்கலம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. சோதனை நடைபெறுவதையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில் நெல்பேட்டை, கோமதிபுரம், வில்லாபுரம் பகுதிகளில் 7 மணிக்கு நிறைவடைந்துள்ளது.