தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வருகிறது. குறிப்பாக ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.


தமிழ்நாடில் வடகிழக்கு பருவ மழை முடிந்த பின் பரவலாக மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் வரை அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் இருந்தது. நீலகிரி பகுதியில் உறைபனி தென்பட்டது. அதிகாலை நேரத்தில் நிலவிய  கடும் பனி மூட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்பின் மார்ச் மாத இறுதியிலிருந்து பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென்காசி, நாகபட்டினம், சிவகங்கை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்து வருகிறது.


ஆனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக தான் உள்ளது. ஈரோட்டில் கடந்த 4 நாட்களாக 100 டிகிரி  பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்றைய தினம், ஈரோட்டில் 39.4 (102.92 டிகிரி பாரன்ஹீட்) டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 39.4, 39.3, 39.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக மதுரையில் 38.6 டிகிரி செல்சியஸ் டிகிரி பதிவாகியுள்ளது. மேலும் வேலூர், திருச்சி, திருப்பத்தூர், நாமக்கல், பாளையங்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கிளில் 37 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியுள்ளது.


கோவை, திருத்தணி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியே வெப்பநிலை பதிவானது. குன்னூர், கொடைக்கானல், உதகை ஆகிய மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையை பொறுத்தவரை மீனம்பாக்கம் பகுதியில் 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால், மக்கள் வெலியில் செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது. 


வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் தென் தமிழக மாவட்டங்கள், வடஉள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.