Tamilisai Mother Passed Away: ஆளுநர் தமிழிசை தாயார் கிருஷ்ண குமாரி காலமானார்: தலைவர்கள் இரங்கல்!

”இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்” - தமிழிசை

Continues below advertisement

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் தயாரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ண குமாரி இன்று காலமானார். அவரது மறைவு குறித்து தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

அதில், "என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்... என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

தமிழிசையின் தாயார் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களின் மனைவியும் மாண்புமிகு தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயாருமான திருமதி கிருஷ்ணகுமாரி அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உற்ற துணையை இழந்து வாடும் திரு. குமரி அனந்தன் அவர்களுக்கும் தாயை இழந்த துயரத்தில் உள்ள திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில், “தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பை வகிப்பவருமான டாக்டர் (திருமதி) தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயாரும், மூத்த அரசியல்வாதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவருமான திரு. குமரி அனந்தன் அவர்களின் மனைவியுமான திருமதி கிருஷ்ணகுமாரி அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மன வேதனையும் அடைந்தேன். இந்த இழப்பினை தாங்கிக் கொள்ளும் மன வலிமையையும், நெஞ்சுறுதியையும் அவர்களுக்கு வழங்கிட இறைவனை இறைஞ்சுகிறேன். திருமதி கிருஷ்ணகுமாரி அவர்களை இழந்து வருந்தும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், திரு. குமரி அனந்தன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement