ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்பப்பெறப்பட்ட நாளில் இருந்து தாலிபான்கள் ஒவ்வொரு மாநிலங்களாக கைப்பற்றி கடந்த ஞாயிறு அன்று தலைநகர் காபூலையும் பிடித்து ஆட்சிக்கு வந்துள்ளனர். இந்த பிரச்சனை தொடங்கிய நாளில் இருந்து ஆப்கானிஸ்தானில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானிலிருந்து உலர் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதுவும் பாதிக்கப்பட்டதால் உலர் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.


குறிப்பாக இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து உலர் பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அங்கு நிலவும் உள்நாட்டு குழப்பத்தால் இந்தியாவுக்கான உலர் பழங்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு உள்ளது.





இதுகுறித்து ஜம்முவை சேர்ந்த உலர் பழங்கள் சில்லரை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ஜோதி குப்தா கூறுகையில், ”ஆப்கானிஸ்தான் விவகாரம் காரணமாக கடந்த 15 முதல் 20 நாட்களாக உலர் பழங்கள் இறக்குமதி முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் உலர் பழங்கள் விலை கிலோ ரூ.250 வரை உயர்ந்துள்ளது. எங்களிடம் விலை உயர்வு குறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு விளக்கம் தருவது கடினமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் குழப்பத்தை தீர்க்க விலைப் பட்டியலை புதிதாக மாற்றியுள்ளோம். பண்டிகை காலம் என்பதாலும், கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதாலும் உலர் பழங்களுக்கு தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து பாதாம், பிஸ்தா, சீரகம், அத்தி, வாதுமை பழம் உள்ளிவற்றை நாங்கள் அதிகம் இறக்குமதி செய்கிறோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அத்திப் பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அத்திப் பழங்கள் தருவதால் பலரும் அதை அதிகம் வாங்கிச் செல்கின்றனர். இதனால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.” என்கிறார்.




ஜம்முவில் பாதாம், உலர் திராட்சை, அத்தி, வாதுமைப் பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை அதிகரித்து உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் உலர் பழங்களின் விலை இரு மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியும் அதிர்ச்சியும் அடைந்து உள்ளனர்.


”ஒரு நடுத்தர, ஏழை நபரால் இந்த விலை கொடுத்து உலர் பழங்களை வாங்க முடியாது. ஒரு வாரத்தில் இரு மடங்கு விலை உயர்ந்துள்ளதால் செய்வதறியாமல் நிற்கிறோம்” என வேதனை தெரிவிக்கிறார் ஜம்முவை சேர்ந்த வாடிக்கையாளர் சுவாமி குப்தா.


ஆப்கானிஸ்தானுக்கு அருகே உள்ள ஜம்முவிலேயே இந்த நிலை என்றால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதன் விலை மேலும் உயரும் என்ற அச்சம் வாடிக்கையாளர்களிடையே எழுந்துள்ளது.