4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்னும் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 


சமவேலைக்கு சம ஊதியம் என சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில்  தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 வரையே அடிப்படைஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதை அடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் அவர்களின் கோரிக்கையை திமுக, அதிமுக அரசுகள் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும், இன்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.