புதுக்கோட்டையை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முத்து, 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து 2004 முதல் பணி வரன்முறை செய்யக்கோரி முத்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், "தமிழகத்தில் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு 14 மணி நேரம் மட்டுமே பணிபுரிகின்றனர். 7 நாளில் மொத்தமுள்ள 168 மணி நேரத்தில் 14 மணி நேரம் மட்டும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மக்கள் வரிப்பணித்தில் இருந்து 1 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு கவுரமான ஊதியம் பெறும் ஆசிரியர்களின் பொறுப்பும், கடமையும் தனியார் நிறுவன ஊழியர்களை காட்டிலும் பல மடங்கு அதிமாக இருக்க வேண்டும். மேலும் மனுதாரர் 2004-ல் பணி நியமன விதிப்படி பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முத்து மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகல் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, "தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மனுதாரரின் கோரிக்கையை தவிர்த்து, கூறப்பட்டுள்ள ஆசிரியர்கள் சம்பந்தமான பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை நீக்குவதாக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
கொத்தடிமைகளாக பணியாற்றி மீட்கப்பட்ட 33 பேருக்கு தலா 20 ஆயிரம் தரக்கோரிய வழக்கு - தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை செயலருக்கு நோட்டீஸ்
தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சேர்ந்த ஆரோக்கியசாமி பிரிட்டோ உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "சத்திஸ்கரை சேர்ந்த 33 பேர் சிவகாசியில் உள்ள ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்டு கம்பெனியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாக வீடியோ ஒன்றின் மூலம் தகவல் கிடைக்கப் பெற்றது. அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட உதவிகள் மையம் மற்றும் விருதுநகர் வருவாய் அலுவலர் உதவியால், கடந்த 2020 டிசம்பர் 4ஆம் தேதி 22 ஆண்கள் 9 பெண்கள் 2 குழந்தைகள் என மொத்தம் 33 பேர் மீட்கப்பட்டனர். அன்றைய தினமே, அவர்களின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு சட்டிஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனர். கொத்தடிமைகள் தடுப்பு சட்டப்படி மீட்கப்படுவோருக்கு விடுவிப்பு சான்றிதழும், 20 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை அவர்களுக்கான விடுவிப்பு சான்றும், தலா 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆகவே, சிவகாசியில் கொத்தடிமைகளாக பணியாற்றி மீட்கப்பட்ட 33 பேருக்கும் விடுவிப்பு சான்றிதழ் மற்றும் தலா 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு வழக்கு குறித்து தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.