ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக போராடி வந்த அவர்களை இன்று காலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


போராட்டம் தொடரும்:


பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வந்த ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சற்று முன் அவர்களை போலீசார் விடுவித்தனர்.


போலீசார் விடுவித்த பிறகு பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். ஆனால், இடைநிலை பதிவு மூப்பு சங்க ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாக அறிவித்துள்ளனர்.


டி.பி.ஐ.வளாகத்தில் பரபரப்பு:


சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் வரும் 10.30 மணியளவில் தங்களது போராட்டத்தை தொடர்வோம் என்று அறிவித்துள்ளனர். மேலும், தங்களது போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிவித்துள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் இந்த அறிவிப்பால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அவர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தை தொடர்வோம் என்று அறிவித்துள்ளதால், டி.பி.ஐ. வளாகத்திற்கு மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் குவிந்து வருகின்றனர். உள்ளே டி.பி.ஐ. அலுவலர்கள் தவிர வேறு யாரையும் காவல்துறையினர் அனுமதிக்காத சூழலில், ஆசிரியர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அவர்களது போராட்டத்தை டி.பி.ஐ. வளாகத்திற்கு வெளியில் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அமைச்சர் அறிவிப்பு:


முன்னதாக, ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் உயர்த்தப்பட்டு 12 ஆயிரத்து 500 ரூபாயாக தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.  


ஆனாலும், அமைச்சரின் அறிவிப்பில் முழுமையாக திருப்தி அடையவில்லை என்று இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் தேர்வு ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை போலீசார் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தனர். அவர்களை பின்பு, மாலை 7 மணியளவில் விடுவித்து பேருந்துகளில் வேறு, வேறு இடங்களில் இறக்கி விட்டனர்.


பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் டெட் தேர்வு ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.