தமிழகம் முழுவதும் சுமார் 35,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் தொடக்க நிலை பள்ளியில் சுமார் இரண்டரை லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் மேல்நிலை பள்ளியில் சுமார் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர், கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பணியாற்றி வருகின்றனர்.


அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும். கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல்முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவந்தது. அதனடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 40 வயதாகவும், இதர பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.


இந்த வயது வரம்பு கட்டுப்பாட்டின் காரணமாக ஆசிரியர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர், 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக முதலமைச்சர்  மற்றும் துறை சார்ந்த அமைச்சருக்கு மனு அளித்தனர். இவர்களின் கோரிக்கைக்கு இணங்க ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்த பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டார்.


அதனடிப்படையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி எண்.6(a), 5(a) மற்றும் 6ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள, ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45-ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45-லிருந்து 50- ஆகவும் உயர்த்தப்படுகிறது.


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்(09-09-2021)  வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் என்றும் இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும் என்றும் அரசாணை (நிலை) எண்.91, மனிதவள மேலாண்மைத் துறை, நாள் 13.09.2021ன்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை, 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அறிவிப்பு வெளியிட்டார். ஆசிரியர் பணி நியமனத்தில் உச்ச வயது வரம்பு உயர்த்தப்பட்டதை ஆசிரியர்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.




TTSE Answer Key: தமிழ் இலக்கியத்‌ திறனறித்‌ தேர்வு: விடை குறிப்பு வெளியீடு; பார்ப்பது எப்படி?


New Classrooms: அதிகரிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை; 7,200 புதிய வகுப்பறைகள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு - இறுதி விசாரணைக்கு ஒத்திவைப்பு