கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.


 

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அந்த மனுவில், 1975 முதல் 1977ம் ஆண்டுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, வனம், நிர்வாகம், கல்வி,  நீதி நிர்வாகம் உள்ளிட்டவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது எனவும்,  கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றும் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, அரசியல் சட்ட பிரச்னை தொடர்பான இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

 

அதன்படி, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தரப்பில், முழுமையான இறுதி விசாரணைக்கு முன் வழக்கு ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

 

இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

 

 






மற்றொரு வழக்கு








 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலைய துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. 


 

சென்னை சூளையில் உள்ள  சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள்,  நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிரான  நடவடிக்கையை விரைவுபடுத்த  கடந்த 2021 ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது. 

 

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை  விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை எனக் கூறி,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

 

இதனை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அபராதம் விதித்து தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென, த்மிழக அரசுத்தரப்பில்  ஆஜாரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கேட்டுக்கொண்டார். 

 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு  அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

 

அதேசமயம், இணை ஆணையரும், உதவி ஆணையரும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.