Tasmac sale: வாரிசாவது...! துணிவாவது...! விஜய், அஜித்தை ஓரம்கட்டிய டாஸ்மாக்.. பாக்ஸ் ஆபிஸை பதற வைத்த 'குடி’மகன்கள்!

பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக டாஸ்மாக் விற்பனை நான்கு நாட்களில் ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

டாஸ்மாக் வசூல் நிலவரம்:

Continues below advertisement

பொங்கலை ஒட்டி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும் ஒரே நாளில் கடந்த 11ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, வசூலில் தங்களது நாயகனின் படங்கள் தான் முதலிடம் என, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக மோதி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்கள் போர்க்களம் போன்று காட்சியளிக்கின்றன.  வாரிசு திரைப்படம் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், துணிவு திரைப்படம் ரூ.175 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மறுமுனயில் சத்தமே இல்லாமல், பொங்கல் விடுமுறையில் டாஸ்மாக் கடைகளின் வசுல் ரூ.1,000 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் விற்பனை:

வழக்கமாக, டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும். வெள்ளிக்கிழமையை தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை போன்ற வார இறுதிநாட்களில் மதுபான விற்பனை அதிகரித்துக் காணப்படும். அதேநேரம், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை பலமடங்கு அதிகரிக்கிறது. இதற்காகவே, எல்லா  டாஸ்மாக் கடைகளிலும் இருப்பு அதிகளவில் வைக்கப்படவில்லை என்று சொல்லாத அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ரூ.850 கோடிக்கு விற்பனை?

அந்த வகையில் தான், பொங்கல் பண்டிகை ஒட்டி கடந்த ஜன.13, 14, 15 ஆகிய 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை ரூ.150 கோடி அளவிலும், சனிக்கிழமை ரூ.250 கோடி அளவிலும் மதுபானங்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை ஒட்டி திங்கட்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.450 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறிப்பிட்ட 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.850 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

ரூ.1000 கோடியை தாண்டிய விற்பனை:

அதைதொடர்ந்து காணும் பொங்கலான நேற்றும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை சூடுபிடித்தது. நகரப் பகுதியில் உள்ளவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் கிராம புறங்களில் மது விற்பனை அதிகளவில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.200 முதல் 300 கோடி ரூபாய் வரை, டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டின் பொங்கல் சீசனில் மட்டும், டாஸ்மாக் விற்பனை ரூ.1,000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, டாஸ்மாக்கில் மதுபான விற்பனை அதிகரித்து இருப்பதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Continues below advertisement