அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி:


அமைச்சர் செந்தில் பாலாஜி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  ”ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிசம்பர் 29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி.” என குறிப்பிட்டுள்ளார்.






 


விசாரணைக்கு உத்தரவு


கடந்த டிசம்பர் 10ம் தேதி  சென்னை - திருச்சி இடையிலான  விமானம் புறப்பட்ட போது, அவசர கால கதவை திறந்து சக பயணிகளுக்கு  அச்சத்தை ஏற்படுத்தியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், விமானத்தில் நடந்த விதிமீறல்  தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சம்பவத்தில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பாஜக பிரமுகர்கள் குறிபிட்ட விமானத்தில் பயணித்துள்ளனர். அவர்களில் ஒருவர் விமானம் புறப்பட்டப்போது  அவசர கால கதவை திறந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையானது.


பல்வேறு தரப்பினர் கேள்வி:


இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டு பாதுகாப்பு சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மத்திய அரசின் தலையீட்டின் பேரில், மூடி மறைக்கப்படுவதாக  பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர். விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின்  தலையீட்டின் பேரால்  இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர்  சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர். 


செந்தில் பாலஜி டிவீட்:


செந்தில் பாலாஜி கடந்த 29ம் தேதியன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள். விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி மறைமுகமாக சாடியது, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை தான் என பல தரப்பினரும் கூறி வந்தனர். மற்றொரு நபர், பாஜகவை சேர்ந்த பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா என கூறப்படுகிறது. அவர்தான், எதிர்பாராத விதாமாக அவசரகால கதவை திறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்றைய பதிவின் மூலம், செந்தில் பாலஜி மறைமுகமாக விமர்சித்து இருப்பது, அண்ணாமலையை தான் என்பது உறுதியாகியுள்ளது.


பாஜக பிரமுகர்களுக்கு சம்மன்?


இந்நிலையில் தான், விமானத்தின் அவசரகால கதவை திறந்தது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி விளக்கமளிக்க இண்டிகோ நிறுவனத்திற்கு,  விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, குறிப்பிட்ட விமானத்தில் பயணித்த குறிப்பிட்ட பாஜக பிரமுகர்கள் இருவரும் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.