Tasmac Liquor Sale: தீபாவளி விடுமுறையை ஒட்டி தமிழக டாஸ்மாக் கடைகளில், 850 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


டாஸ்மாக் மதுவிற்பனை:


தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த சனிக்கிழமை முதல், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதையடுத்து துணிக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேநேரம், மதுவிற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைகளிலும், மதுபிரியர்கள் முண்டியடித்தனர். வழக்கமான தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 150 கோடி ரூபாய் வரை மதுவிற்பனை நடைபெறும். அதுவே வார இறுதி விடுமுறை நாட்களில் 175 கோடி ரூபாய் வரையிலும் மதுவிற்பனை நடைபெறும். இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையில் தீபாவளி வந்ததால், வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் தமிழக டாஸ்மாக் கடைகளில் மொத்த மது விற்பனை 850 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


4 நாட்களில் ரூ.850 கோடிக்கு மது விற்பனை:


வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிறு வரை வழக்கமாக நடைபெறும் மதுவிற்பனையை காட்டிலும், பண்டிகை காலத்தை ஒட்டி கடந்த வாரம் கூடுதல் விற்பனை பதிவானது. பண்டிகையை முடித்துக்கொண்டு உடனடியாக வெளியூர்களுக்கு பயணிக்க முடியாது என்பதால், திங்கட்கிழமையும் தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. ஆனால், இதுவும் மதுவிற்பனைக்கு தான் சாதகமாக அமைந்துள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் மீண்டும் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரையில் மட்டும், டாஸ்மாக் கடைகளில் 850 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது.


மதுவிற்பனை விவரங்கள்:


கடந்த வெள்ளிக்கிழமை அன்று 241.02 கோடி ரூபாய்க்கும், சனிக்கிழமை அன்று 220 கோடியே 85 லட்சத்திற்கும், ஞாயிற்றுக்கிழமை அன்று 246 கோடியே  78 லட்சத்திற்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. அரசு விடுமுறை நாளான நேற்றும் குறைந்தபட்சம் 150 கோடி ரூபாய்க்கும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த நாட்களில் சராசரியாக சுமார் 220 கோடி ரூபாய்க்கு தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.


சாதனை முறியடிப்பு:


குறிப்பாக கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கிழமையில் மட்டும் சென்னை மண்டலத்தில் 101 கோடியே 10 லட்சத்திற்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.95 கோடியே 62 லட்சத்திற்கும்,  சேலம் மண்டலத்தில் 86 கோடியே 50 லட்சத்திற்கும், மதுரை மண்டலத்தில் 104 கோடியே 70 லட்சத்திற்கும்,  கோவை மண்டலத்தில் 79 கோடியே 81 லட்சத்திற்கும் மது விற்பனையாகி உள்ளது.  அதன்படி மொத்தமாக 2 நாட்களில் மட்டும் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரண்டு நாட்களில் 431 கோடி ரூபாய்க்கு மட்டுமே மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.