கனமழை காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஆகிய இரண்டு தாலுக்காக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
நேற்று மாலை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ”தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.
2.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான-கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
14.11.2023: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்க கடல் பகுதிகள்:
14.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.