Tasmac Liquor: தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில். ரூ.80 என்ற விலையில் 90 மில்லி லிட்டர் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.


டாஸ்மாக்:


கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவும், மதுவிற்பனையை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும், தமிழக அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. ஆனாலும் கூட அண்மையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான்,  டாஸ்மாக் கடைகளில் வரும் அக்டோபர் மாதம் முதல் 90 மில்லி லிட்டர் மதுபான பாட்டில்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


90 மி.லி., மதுபாட்டில்கள்:


மது பாட்டில்களின் மறுபயன்பாடு என்பது முழு அளவில் இல்லை என்பதோடு, கூடுதல் செலவு ஏற்படுவதால் டாஸ்மாக்கில் 90 மில்லி லிட்டர் அளவிலான மதுவை டெட்ரா பேக்குகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்பு குரல்களும் இருக்கத்தான் செய்கின்றன. 90 மில்லிலிட்டர் பாட்டில் விற்பனைக்கு வந்தால் மது குடிக்கும் அளவு சற்று குறையும் என மதுப் பிரியர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், மதுவை அப்படியே குடிக்கும் பழக்கம் அதிகரித்து உடல்நிலை கெடும் சூழல் மேலும் அதிகரிக்கும் எனவும் மற்றொரு தரப்பினர் எச்சரிக்கின்றனர். இந்த சூழலில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 90 மில்லி மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


டாஸ்மாக் அதிகாரிகள் கூறுவது என்ன?


புதிய திட்டம் தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் பேசுகையில், “தமிழ்நாட்டில் 90 மில்லி பாட்டிகள் மற்றும் டெட்ரோ பாக்கெட்டுகளில் மதுவை அடைத்து விற்பனை செய்வது தொடர்பாக பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த சூழலில் 90 மில்லி மது விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 90 மில்லி பாட்டில்கள் மற்றும் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தெலங்கானாவில் 90 மில்லி மதுபாட்டில்கள் தான் பெரும் அளவில் விற்பனை ஆகின்றன. 


அண்மையில் மதுபான உற்பத்தியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில், 90 மில்லி மது பாட்டில்களுக்கான உற்பத்தி செலவு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 90 மில்லி மதுபானம் விலை சராசரியாக ரூ.80 ஆக இருக்கலாம். 6 மாதங்களுக்குள் உற்பத்தியை தொடங்குவதாக ஒப்புக் கொண்டுள்ளதால், வரும் அக்டோபர் மாதத்திற்குள் கடைகளில் 90 மில்லி மது பாட்டில்கள் விற்பனைக்கு வரலாம்” என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழக டாஸ்மாக் கடைகள்:


தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான வகைகள், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், பீர் மற்றும் ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்தபட்ச அளவாக ரூ.140-க்கு 180 மில்லி லிட்டரில் தொடங்கி மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன.