தமிழ்நாட்டில் வரும் நாட்களில் முதற்கட்டமாக 200 டாஸ்மாக் கடைகள் நவீனமயமாக்கப்பட உள்ளது. மது வகை மற்றும் விலை பட்டியலை டிஜிட்டல் போர்டில் வைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. அதைதொடர்ந்து, 'எலைட்' எனப்படும் உயர் மதுபானங்களை உள்ளடக்கிய கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களுக்கு பாட்டிலுக்கு ரூபாய் 10 முதல் 320 வரை விலையை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. 


தமிழ்நாட்டில் நவீனமயமாகும் டாஸ்மாக் கடைகள்:




 


தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் இருக்கின்றன. குறிப்பாக, இதில் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்கள் விற்பனை ஆகும் 'எலைட்' எனப்படும் கடைகளின் எண்ணிக்கை 238 ஆகும். தமிழ்நாட்டு அரசின் நிர்வாக வசதிக்காக டாஸ்மாக்கை 5 மண்டலங்களாகவும் 38 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசு அறிவுறுத்தலின்படி 500 கடைகள் முடப்பட்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் மதுபானங்களுக்கு ரூபாய் 10 முதல் 320 வரை உயர்த்தப்பட்டது. தற்போது, அண்டை மாநிலங்கள் போல் டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்கும் முயற்சியில் டாஸ்மாக் நிர்வாகம் முனைப்பு எடுத்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 38 மாவட்டங்களில் உள்ள தலா 5 கடைகளை நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளது. இதில் கடைகளில் மது பிரியர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் அலங்கரிப்பு, மின் விளக்குகள், முக்கியமாக மதுபாட்டில்களின் விலைப்பட்டியலை டிஜிட்டல் பலகையில் வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.


மதுப்பிரியர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா தமிழ்நாட்டு அரசு:


மதுப்பிரியர்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று மதுக்கடைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க வேண்டும் எனவும் தற்போது இருக்கும் நிலைமையே மதுக்கடைகளுக்கு நீடிக்க கூடாது எனவும் நீண்ட நாள் கோரிக்கை ஆக வைத்து வருகின்றனர். இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் செவிசாய்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த நவீனமயமாக்கும் செலவை மது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஏற்கும் வகையில் பேச்சு வார்த்தையில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் படிப்படியாக நவீனமயமாக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகள் அண்டை மாநிலங்களான புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் இருக்கும் அலங்கரிக்கும் மின் விளக்குகள் போலவும் கேரளாவில் இருக்கும் டிஜிட்டல் விலைப்பட்டியல் போலவும் தமிழ்நாடில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஒரு பக்கம் தமிழ்நாட்டில் பொது மக்களும் பெண்களும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பேராடி கொண்டு இருக்கும் வேளையில், இத்தகைய மதுக்கடைகளை நவீனமயமாக்கும் தகவல் வந்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஒருபுறம் 500 மதுக்கடைகளை மூடி விட்டோம் என்று கூறும் மாநில அரசு, மறு புறம் மதுக்கடைகளை நவீனமயமாக்கும் திட்டம் வைத்திருப்பது குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் செயல் என மக்கள் விமர்சனம் செய்து  வருகின்றனர்.