மின்வெட்டு தொடர்பாக தமிழகத்தில் வேகமாக பரவும் போலி தகவல் குறித்து மின் உற்பத்தி, பகிர்மான தொடரமைப்புக் கழகம் (டேன்ஜெட்கோ) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. அதில், இணையத்தில், செல்போன் வாயிலாக உலா வரும் கீழ்க்கண்ட போலி குறுந்தகவலை மக்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறுந்தகவலின் ஸ்க்ரீன் ஷாட்டும் பகிரப்பட்டுள்ளது.
மின் இணைப்பு:
அந்த குறுந்தகவலில், அன்பான வாடிக்கையாளர்களே, உங்களது மின் இணைப்பு இன்று இரவு 10.30 மணிக்கு துண்டிக்கப்படும். நீங்கள் கடந்த மாதத்திற்காக மின் கட்டண விவரத்தை தெரிவிக்காததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. நீங்கள் இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தை 0620131460 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறவும் என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களின் செல்பேசிக்கு இதுபோன்ற போலி குறுந்தகவல் வந்தால் அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
போலி தகவல்கள்:
இதுபோன்று அவ்வப்போது மின்வாரியம் அனுப்பியதாக பல்வேறு போலி தகவல்கள் வெளிவருவதும் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அமைச்சரோ நிராகரித்து விளக்கமளிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அண்மையில் மின் இணைப்பு எண் ஆதார் பற்றி பல்வேறு போலி தகவல்கள் வெளியான நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்படும். மின் இணைப்புப் பெற்றவர்கள் இறந்திருந்தால் பெயரை மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் விநியோகம் ரத்து என்ற தகவல் தவறானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
ஆதார் இணைப்பு:
மின் நுகர்வோர் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மின் மோசடிகளைத் தவிர்க்க மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் சேர்க்க வேண்டும் எனவும் இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 100 யுனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பவர்கள், விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யுனிட் இலவச மின்சாரம் பெறும் கைத்தறி நுகர்வோர் என அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாதவர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை என்றும் மின்சார வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.