விழுப்புரம்: தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி பகுதியில் நடத்த  இடத்தை தேர்வு செய்துள்ளது.


தமிழக வெற்றிக் கழகம் மாநாடு 


தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக விஜய் தலைவர் மேற்கொண்டு வருகிறார். இதற்காக, அவர் சற்று தீவிரம் காட்டி வருவதை செயல்களால் பார்க்க முடிகிறது. குறிப்பாக, தவெக கட்சி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, தலைவர் விஜய் கடந்த 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். இதையடுத்து, இந்த கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெறும் நிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விக்கிரவாண்டியில் தாங்கள் தேர்வு செய்து தலைமைக்கு அனுப்பிய இடமே நிச்சயமாக தேர்வாகவுள்ளதாக எண்ணி மாநாடு விளம்பர போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்களை அடித்து வைத்து, இடத்தை மட்டும் காலியாக விட்டு வைத்து தயார் நிலையில் உள்ளனர்.


தலைமையின் முறையான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருப்பதோடு, கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்தால், தலைவர் விஜய்யின் வெற்றிக்கு சென்டிமென்டாக இந்த மாவட்டம் அமைந்து விடும் என எண்ணி குஷியோடு காத்திருக்கின்றனர். 


இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் 23ம் தேதி மாநாடு நடத்த அனுமதி பெற உள்ளனர்.