அதானி குழுமம் மீதான முறைகேடு புகாரால் எல்.ஐ.சிக்கு நெருக்கடிஏற்பட்டுள்ளதாகவும், நேர்மையான விசாரணை நடத்தி மக்களின் சேமிப்பை பாதுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தி.வேல்முருகன் கோரியுள்ளார்.
இது தொடர்பாக முன்னதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும், அந்தக் குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமம் மோசமான பங்கு கையாளுதல், கணக்கு மோசடி ஆகியவற்றின் மூலமாக இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்களை அமெரிக்க நிறுவனம் திரட்டி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒட்டுமொத்தமாக அதானி குழுமம் பங்குச் சந்தைகளில் இரண்டே நாளில் ரூ.4.20 லட்சம் கோடியை இழந்ததோடு, உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்த கவுதம் அதானி 7ஆவது இடத்திற்குச் சென்றுள்ளார்.
அதானி குடும்ப உறுப்பினர்கள் மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட், கரீபியன் தீவுகள் போன்ற வரி மோசடிக்கு புகழ்பெற்ற நாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்க ஒத்துழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கவுதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி வைர வர்த்தக இறக்குமதி ஏற்றுமதி திட்டத்தில் முறைகேடு செய்துள்ளதாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் குற்றம்சாட்டப்பட்டு 2 முறை கைது செய்யப்பட்டவர்.
அதானி குழுமத்தின் மோசடியால் பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், அரசுக்குச் சொந்தமான எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ, நிறுவனங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால், எல்ஐசி நிறுவனம், அதானி குழுமத்தில் ரூ.74 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. அதில் 24,000 கோடி ரூபாயை இரண்டு நாட்களில் இழந்துள்ளது. இது தவிர்த்து எல்ஐசியின் பங்கு மதிப்பு ரூ.22,500 கோடி சரிந்துள்ளது. அதானி குழுமம் பெற்றுள்ள மொத்த கடனில், 81, 200 கோடி ரூபாய், எஸ்.பி.ஐ வங்கியில் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
அதானி குழுமம் மீதான மோசடி உறுதியானால், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகிய பொது நிறுவனங்களில் தனது வாழ்நாள் சேமிப்பை வைத்துள்ள கோடிக்கணக்கான இந்திய மக்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கும்.
அதானி குழுமம் மீதான முறைகேடு புகாரின் காரணமாக, எல்.ஐ.சி, எஸ்.பி.ஐக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும், ஒன்றிய அரசும், இவ்விவகாரத்தை அலட்சியப்படுத்தாமல், நேர்மையான முறையில் விசாரணை நடத்தி மக்களின் சேமிப்பை பாதுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.