சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நுழைந்தார் என்பதற்காக திருமலைகிரி திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்த வாலிபரை அடிக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் திமுக தலைமை கழகம் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி. மாணிக்கம் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவபெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 



சேலம் மாவட்டம் இளம்பிள்ளை செல்லும் சாலையில் திருமலைகிரி கிராமம் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் தை மாத திருவிழாவானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் முடிந்து மறுபூஜையானது நடைபெற்று வந்தது. அப்போது பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு இளைஞர் கோவில் கருவறைக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நாங்கள் செல்லமாட்டோம் என ஒரு பகுதி மக்கள் தெரிவித்ததாக கூறினர். அங்கு வந்த திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்த இளைஞரை கோவில் வளாகத்தில் நிற்க வைத்து அவரது குடும்பத்திற்கு முன்பாக மற்றும் ஊர் மக்கள் மத்தியில் அந்த வாலிபரை நீ செய்த வேலையால் எங்கள் சமூகத்தை சேர்ந்த சிலர் கோவிலுக்குள் வர மறுப்பதாக ஆபாச வார்த்தைகளால் திட்டினார். 



மேலும் ஒருகட்டத்தில் இது எங்கள் பணத்தில் கட்டப்பட்ட கோவில் ஆகும் என அவர் கூறி அந்த பட்டியலின வாலிபரை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் இது குறித்து சேலம் மாநகர் இரும்பாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் மாணிக்கத்தின் மீது பாதிக்கப்பட்ட இளைஞர் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் திமுக தலைமை கழகம் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.