தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தவேல்முருகன் இன்று (18-11-2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் நிலக்கரி அனல்மின் நிலையத்திற்காக 2009 இல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்ததால், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முயற்சியை அக்கழகம் தொடங்கியுள்ளது.


மக்களுக்கு பேராபத்து


இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி எர்ணாவூர் மகாலெட்சுமி நகரில் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. வட சென்னையில் ஏற்கனவே 3330MW அளவிற்கான அனல்மின் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் புதிதாக 660MW அனல்மின் நிலையத்தை அங்கு அமைப்பது என்பது சுற்றுச்சூழலுக்கும், சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.


ஏற்கனவே, எண்ணூர், மணலியில் பெரிய அனல் மின் நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலை, பாலிமர் மற்றும் இரசாயன ஆலைகள், வாகனத் தொழிற்சாலை, நிலக்கரி சேமிப்பிடங்கள் என 40க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மேலும் புதிதாக 660MW அனல்மின் நிலையத்தை அமைப்பது, அப்பகுதியை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றி விடும்.


காற்று மாசு வெளிப்படுகிறது


வட சென்னையில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்களில் இருந்து நீரிலும் காற்றிலும் வெளியேறும் சாம்பல் எண்ணூர் கழிமுகப் பகுதியினை கடுமையாக பாதித்துள்ளதை பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், நரசிம்மன், பாலாஜி நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழு அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சராசரியாக ஒரு 500MW அனல் மின் நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 105 டன் சல்பர் டை ஆக்சைடு , 24 டன் நைட்ரஜன் ஆக்சைடு , 2.5 டன் நுண்துகள்கள், மற்றும் 3500 டன் அளவிற்கு சாம்பல் உள்ளிட்ட காற்று மாசு வெளியேறுகிறது.


பல்வேறு வகையான பாதிப்புகள்


சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களை சுற்றி வரவுள்ள அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக, அடுத்த 10 ஆண்டுகளில் 52,700 பேர் அகால மரணம் அடைய நேரிடும். மேலும், டெல்லி, மும்பை, பெங்களூரைக் காட்டிலும் சென்னையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் 31,700 குறை பிரசவங்களும், பல்லாயிரம் பேருக்கு ஆஸ்துமாவினாலும் பாதிப்பு ஏற்பட்டு கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு செல்லும் அபாயம் நிகழக்கூடும் என்றும் ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது.


இவை தவிர, கடந்த 2019இல் இருந்து 2020 வரை 660 நாட்களில் சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனமும், 418 நாட்கள் வட சென்னை அனல்மின் நிலையம் 273 நாட்களும், தமிழ்நாடு பெட்ரோலியம் நிறுவனம் 228 நாட்களும் காற்று மாசு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.


அதிர்ச்சி அளிக்கிறது


இந்தச் சூழலில், எண்ணூரில் புதிய அனல்மின் நிலையத்தை அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், வட சென்னைப் பகுதியின் சுற்றுச்சூழல் மேலும் மாசடைந்து அது வாழத் தகுதியற்ற இடமாகவே மாறிப்போகும். எனவே, மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரான புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட்டு, சூரிய ஆற்றல், காற்றாலை மின்சாரம் என புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். காலநிலை பருவமாற்றத்தைக் கருத்தில் கொண்டு, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.