முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுக் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது. 


மாநில திட்டக்குழுவுக்கு முதலமைச்சர் பாராட்டு:


மகளிருக்கான இலவச நகர பேருந்து  திட்டமான விடியல் பயணம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருந்துவம் ஆகிய திட்டங்களின் பயன்கள் மகளிர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் விளக்கப்பட்டன. 


இதை தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சியின் கொள்கை வகுப்புக்கு அடித்தளமாக இருக்கிற திட்டக் குழுவினருடன் கலந்துரையாடல் நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா? என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாக திட்டக்குழு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 


குறிப்பாக, மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், அரசின் வழிகாட்டிகளில் ஒருவராகச் செயல்பட்டு வருகிறார். முக்கிய கொள்கைகளை வகுப்பதற்கு முனைப்புடன் வழிகாட்டுதல் வழங்குகிறீர்கள். முக்கியத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த துணை நிற்கிறீர்கள். அரசுக்கும் - மக்களுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடாமல் - அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்கு திட்டக்குழு சீர்மிகு பணியாற்றி வருகிறது.


"பெண்களுக்கு பொருளாதார சுதத்திரம் கிடைத்துள்ளது"


சில முக்கியமான கொள்கைகளை வகுக்கும் பணி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மின் வாகன கொள்கை, தொழில் - 4.0 கொள்கை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை, தமிழ்நாடு மருத்துவ உரிமைக் கொள்கை, தமிழ்நாடு பாலின மாறுபாடு உடையோருக்கான நலக் கொள்கை உள்ளிட்டவற்றை தயாரித்து நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள்.


கழிவு மேலாண்மை கொள்கை, தமிழ்நாட்டின் நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை, நீர்வள ஆதாரக் கொள்கை வேலைவாய்ப்பு மற்றும் திறன் கொள்கை உள்ளிட்டவற்றை விரைந்து இறுதி செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நான் மிக முக்கியமாகக் கருதுவது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்து வருகிறது என்பது தொடர்பாக நீங்கள் தரும் ஆய்வறிக்கைகளைத்தான்.


மகளிருக்கு இலவச விடியல் பயணத் திட்டத்தை நிறைவேற்றினோம். இந்த திட்டத்தின் மூலமாக நாம் பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்கள், உயர்வுகள் என்னென்ன என்பதை திட்டக் குழு அறிக்கையாகக் கொடுத்த பிறகு தான் அந்த திட்டத்தின் விரிந்த பொருள் அனைவரையும் சென்றடைந்தது. 


மாதம் தோறும் 800 ரூபாய் முதல் 1200 வரை சேமிக்கிறார்கள் என்பதைவிட பெண்களுக்கு பொருளாதார சுதத்திரம் கிடைத்துள்ளது. சமூகத்தில் அவர்களது பங்களிப்பு அதிகமாகி இருக்கிறது. வேலைகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக சமூக உற்பத்தியும் உழைப்பும் உற்பத்திக் கருவிகளும் அதிகமாகி இருக்கிறது. இவற்றை பற்றி எல்லாம் ஆங்கில ஊடகங்கள் அதிகமாக எழுதத் தொடங்கியுள்ளது" என்றார்.