Minister TRB Raja: மார்ச் மாதத்திற்குள் தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி 9 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய சாதனை படைக்கும் எனத் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி:


அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீட்டு மாநாடுகள், வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதன் காரணமாக ஒரு தொழில் புரட்சியை நோக்கி தமிழ்நாடு அரசின் தொழில்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தொழில் துறையில் உயர்ந்த தொழிற் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி விரைவுபடுத்தப்படுகிறது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில், இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கிடும் தமிழ்நாடு தொடர்ச்சியாக இந்நிலையை உறுதிப்படுத்தி வருகின்றது.


மின்னணு ஏற்றுமதியில் சாதனை:


தமிழ்நாட்டில் இருந்து மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி தற்போது 7.37 பில்லியன் டாலரை அடைந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியே 22.65 பில்லியன் டாலர் எனும்போது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், கிட்டத்தட்ட 32.52 சதவிகிதம் ஆகும். முந்தைய நிதியாண்டில் (2022-2023) மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 5.37 பில்லியன் டாலர் ஆகும். இந்தத் தரவுகளை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் அதாவது 2023-24 இல் 10 மாத காலகட்டத்திற்குள்ளாகவே 7.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் மாநிலத்தின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 9 பில்லியன் டாலர்களை எட்டி புதிய சாதனை படைக்கும்.


வளர்ச்சிக்கான காரணிகள்:


தமிழ்நாடு பல்வேறு துறைகளில் குறிப்பாக மின்னணு பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது என்றால் அதற்குப் பல காரணிகள் உள்ளன. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், முனைப்பான ஆளுமை, கொள்கை சார்ந்த அணுகுமுறை, வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் நிர்வாகம், உற்பத்தி மற்றும் துல்லியப் பொறியியலில் சிறந்து விளங்குதல், உயர்தர தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டு இத்தகைய அபார வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டுள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும் இத்துறையில் கொட்டிக் கிடக்கும் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாடு குறை கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் கொள்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது.


அடுத்த இலக்கு:


2030 ஆம் ஆண்டிற்குள் இத்துறையின் வளர்ச்சியை நன்கு துரிதப்படுத்தி 2 லட்சம் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதே, இந்தக் கொள்கையின் உயரிய நோக்கமாகும். பல்வேறு துறை சார்ந்த முதலீட்டாளர்களுடன் தொடர்ச்சியாக நல்லுறவுகள் மேற்கொண்டு வருவதன் மூலம், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது. மிகச் சிறந்த மனித வளம், அனைத்துத் துறைகளும் மேம்படும் வகையில் அமைந்துள்ள சிறப்பான சூழலமைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற வலுவான அம்சங்களைத் தமிழ்நாடு பெற்றுள்ளது” என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.