TN Rain Alert: சனிக்கிழமை வரை மழை தொடரும் எனவும், இது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்றும் வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.


வடமாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை:


தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “காஞ்சிபுரம் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மீண்டும் வட உள் தமிழகம் உட்பட வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். காஞ்சிபுரம் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டஙளுக்கும் சில இடங்களில் டமால் டுமீல் (இடி, மின்னலுடன்) கிடைக்கும். இந்த மழை சாமானியர்களின் இன்ப மழை!!!” என தெரிவித்துள்ளார்.



10 மணி வரை மழை தொடரும் - வானிலை மையம்:


திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் காலை 10 மணி வரை மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மழை தரும் மேகங்கள் உருவாகியுள்ளதன் காரணமாக மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம், இன்று சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை ஏதும் இல்லை என சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.