வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டின் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மழை தொடர்ந்து பரவலாக பெய்து வந்தது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.


13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:


இந்த நிலையில், சென்னையில் இன்று காலை எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பணிக்கு செல்வோர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக னெ்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 மணி நேரம் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து வட தமிழநாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பாதிப்பு:


வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் ஏரிகள், குளங்கள் உள்பட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மழை பெய்ததன் காரணமாக, சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், பணியாளர்களும் தேங்கிய நீரை உடனடியாக அகற்றினர்.


இந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக சென்னையில் கடும் குளிர் நிலவி வருகிறது. அதிகாலை நேரம் மட்டுமின்றி பகல் பொழுதிலும் குளிர் நிலவியதால் சென்னைவாசிகள் குளிரால் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளிலும் வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.


இந்த சூழலில், வங்கக்கடலில் புதிய வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.   


மேலும் படிக்க : Engineering Counselling 2022: 65% நிரம்பிய இடங்களுடன் பொறியியல் கலந்தாய்வு நிறைவு; கல்லூரிகளில் சேரும் 1 லட்சம் மாணவர்கள்- முழு விவரம்


மேலும் படிக்க : Kamalhassan: மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்...! ரசிகர்கள் மகிழ்ச்சி...