தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு:
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நேற்று மிதமான மழை காலை நேரத்தில் பெய்த நிலையில் இன்றும் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயல்பை விட அதிக மழை:
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக வடகிழக்கு பருவமழையே அதிகளவு மழைப்பொழிவைத் தரும். தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்யும். ஆனால், இந்த முறை தென் மேற்கு பருவமழை இயல்பை விட 88 சதவீதம் தமிழ்நாட்டில் பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழையும் அதிகளவு பெய்யும் என்று கருதப்படுகிறது. இதனால், தற்போது முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், முக்கிய நீர்நிலைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேசமயம் மழைநீரை வீணாகாமல் சேர்த்து வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.