தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பரவலாக பெய்து வந்த நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள் அதற்கு ஆயத்தமாக குடையுடன் செல்வது நல்லதாகும்.






பொதுவாக வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தென் மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும். இந்த முறை தென்மேற்கு பருவமழைப் பொழிவே தென்மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவைத் தந்துள்ளது.


இதனால், வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த மழையை தந்துவிட்டால் இந்த முறை தமிழ்நாட்டின் நீர்நிலைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும், தொடர் மழை காரணமாக விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீரும் நீர்நிலைகளில் இருந்து வருகிறது. இதனால் சாகுபடிக்கு தேவையான அளவு நீர்நிலைகளில் இருப்பதை வேளாண் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.  மேலும், ஆறுகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றின் கரைகளை பலப்படுத்தும்  பணிகளிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைப் பொறுத்தவரை காலை முதல் வெயில் வதைத்து வருகிறது.