தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத் தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், மழை இன்னும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், சென்னை, காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை என தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மினன்னலுடன் கூடிய மழை அடுத்த 3 மணி நேரத்தில் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






அதேபோல, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை  அடுத்த 3 மணி நேரத்திற்கு பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடரும் கனமழை:


தொடர் மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட நிர்வாத்தையும் தயார் நிலையில் இருக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நீர்நிலைகளின் நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.


மழை அதிகளவு பெய்து மழைநீர் உள்ளே புகும் அபாயம் கொண்ட கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சத்தியமங்கம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.