நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி 11 ஆயிரம் என்ற அளவை நெருங்கிவருகிறது. தமிழகத்திலும் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவு என்ற தனி வார்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் கொரோனா வார்டு தொடங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி என்ற பெண், செல்வராஜ், சிராஜ் உள்பட 4 பேர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
ஒரேநாளில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 நபர்கள் அடுத்தடுத்த உயிரிழந்ததற்கு, மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதே காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினார். மேலும், அவர்கள் 4 பேரும் உயிரிழந்த பிறகே மருத்துவமனையில் அவசரம் அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாற்றப்பட்டதாகவும் கூறினர். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்த உயிரிழப்பு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 4 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். இருப்பினும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நோட்டீஸ் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில், ஆக்சிஜன் செல்லும் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாகவே 4 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தியின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என்று கூறியுள்ளார்.