பிரான்ஸ் எல்லை பகுதியில் இருக்கும் மொனாக்கோ சிட்டியில் நடைபெறவுள்ள எனர்ஜி படகு போட்டியில் கலந்துக்கொள்வதற்கான வாய்ப்பு தமிழகத்தை சேர்ந்த பொறியில் கல்லூரி மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
மொனாக்கோ நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றல் படகு போட்டி நடத்தப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் அதிகப்படியான ஏற்றுமதி இறக்குமதி போன்ற வர்த்தகம் கப்பலை சார்ந்தே நடக்கிறது. பெட்ரோல் , டீசல் போன்ற எரி பொருளையே நம்பி இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அது கடல் வளத்தையும் பாதிப்பதாக உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களை வழக்கமான எரிசக்தியை பயன்படுத்தாமல் பேட்டரி , சோலார் போன்ற மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் படகுகளை உருவாக்க மொனாக்கோ அரசு ஊக்குவித்து இந்த போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் பங்கேற்க பல அணிகள் விண்ணப்பித்தாலும் எல்லோருக்கும் இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட சில வழிமுறைகள் மற்றும் புராஜக்டின் அடிப்படையிலேயே போட்டியில் கலந்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியை சேர்ந்த 14 மாணவர்களுக்கு போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
எரிசக்தி படகு போட்டியில் இந்தியா பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் நிலையில் இந்த வாய்ப்பு தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கிடைத்திருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஸிசக்தி என்னும் பெயரில் யாலி என்னும் படகினை உருவாக்கியுள்ளனர். இது முற்றிலுமாக பேட்டரி மற்றும் சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடியது. வருகிற ஜூலை மாதம் 4 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த போட்டியில் பங்கேற்பதற்கு தற்போது நிதி பற்றாக்குறை இருப்பதால் மாணவர்கள் தமிழக அரசு மற்றும் பொதுமக்களிடம் நிதி உதவி கோரி வருகின்றனர். அவர்களுக்கு உதவ நினைப்பவர்கள் seaskathi.com என்னும் இணைதளம் வாயிலாக உதவலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.