எம்.பில்., பிஎச்.டி. படிக்கும் மாணவர்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.


கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாகப் பள்ளி, கல்லூரிகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மெல்ல மெல்லத் தொற்று குறைந்துவருவதை அடுத்து, பிப்ரவரி மாதத்தில் இருந்து உயர் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.


இந்த சூழலில் கற்றல் இழப்பை ஈடுகட்டும் வகையில், எம்.பில்., பிஎச்.டி. படிக்கும் மாணவர்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க ஆராய்ச்சி மேற்பார்வையாளரின் பரிந்துரைப்படி ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்துக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.


இதுகுறித்து யுஜிசி அதிகாரி கூறும்போது, ''எம்.ஃபில்., பிஎச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு, பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை 6 மாத காலம் வரை அவகாசத்தை நீட்டிக்கலாம். 


துறைத் தலைவர் மற்றும் ஆராய்ச்சி மேற்பார்வையாளரின் பரிந்துரைப்படியும் ஆய்வு ஆலோசனைக் குழுவின் அறிவுரைப்படியும் இந்த நீட்டிப்பை மேற்கொள்ளலாம்'' என்று யுஜிசி அதிகாரி தெரிவித்தார்.




நீக்கப்படும் எம்.பில். படிப்பு


இந்திய உயர் கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 


அதன்படி 2022- 23ஆம் கல்வியாண்டு முதல் எம்.ஃபில். படிப்புகள் முழுமையாக நீக்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது. அதேநேரம் இதுவரை வழங்கப்பட்டுள்ள எம்ஃபில் பட்டங்கள் செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.


அதேபோல், பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்புக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளின் வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டது. அதில் 4 ஆண்டுகால இளங்கலைப் படிப்பை முடித்த பட்டதாரிகள் முதுகலைப் பட்டத்தைப் படிக்கத் தேவையில்லை. அவர்கள் பிஎச்.டி. படிப்பில் நேரடியாகச் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டது.


புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் எம்.ஃபில் படிப்பு நிறுத்தப்பட்டு வந்தாலும், தமிழகத்தில் தொடரப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண