தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இரண்டாவது கட்டமாக, 14,712 டன் அரிசி, ரூ. 7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ. 11.90 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் என மொத்தம் ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன.


இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


இதனிடையே இலங்கை நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில் இனியும் தாமதிப்பது நன்றாக இருக்காது என்ற அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிபுரிந்திடும் வகையில்
1.ரூபாய் 80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, 
2.ரூபாய் 28 கோடி மதிப்பிலான உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள்,
3.ரூபாய் 15 கோடி மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர்,
ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பிவைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்கவேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 29.04.2022 அன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு முதலமைச்சரின் தனித் தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டபடி இலங்கை மக்களுக்கு உதவக்கூடிய வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்களை அனுப்பி வைக்கும் பணியினை சீரிய முறையில் செய்து முடித்திட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு அரசு மருந்துப் பொருட்கள் நிறுவனம், மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.



இலங்கை வாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பிவைக்கும் நிகழ்வு முதற்கட்டமாக  18.05.2022 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. ரூ.30 கோடி மதிப்பிலான 9045 மெட்ரிக் டன் அரிசி, ரூ.1.5 கோடி மதிப்பிலான 50 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ.1.44 கோடி மதிப்பிலான  8 டன் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலங்கை நாட்டிற்கு TAN BINH  99 என்ற சரக்குக் கப்பலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.  இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மாதிரி தொகுப்பு இலங்கை துணைத்தூதர் முனைவர் வெங்கடேசுவரனிடம் வழங்கப்பட்டது.  


அதன் தொடர்ச்சியாக இன்று (22.06.2022) இரண்டாம் கட்டமாக காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் VTC SUN என்ற சரக்கு கப்பலின் மூலமாக ரூ. 48.30 மதிப்பிலான 14,712 டன் அரிசி, ரூ. 7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ. 11.90 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் என மொத்தம் ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் அர.சக்ரபாணி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் , மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர், தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.  இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.