கொரோனா பேரிடருக்கு பிறகு நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல இயங்கி வருகிறது. இதையடுத்து, ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி காலாண்டு தேர்வு நிறைவு பெற்றது. இதையடுத்து, காலாணடுத் தேர்வு விடுமுறை ஒரு வாரம் விடப்பட்டது.
இதையடுத்து, கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரையில் காலாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை நிறைவு பெற்று மாணவர்கள் அனைவருக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட உள்ளது.
காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் இன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். பல மாவட்டங்களில் காலை 7 மணி முதல் பள்ளிகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வரத் தொடங்கியுள்ளனர். அரசுப்பள்ளிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும்,எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.
இதனால், அரசுப்பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 13-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. காலாண்டுத் தேர்வு விடுமுறைக்காக பல ஊர்களில் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வெளியூர்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும், சுற்றுலாவிற்கும் சென்றிருந்தனர்.
இன்று பள்ளி மீண்டும் திறப்பு என்பதால் பல மாவட்டங்களில் குடும்பங்களாக வெளியூர்களுக்கு மக்கள் பயணிப்பது நேற்று வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. மேலும், ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்காலமும் காலாண்டுத் தேர்வு விடுமுறை இடையே வந்ததால் வெளியூர்களுக்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்புபவர்கள், விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரி திரும்புவோர்கள் எண்ணிக்கையாலும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
காலாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.