தமிழ்நாடு முழுவதும் மழை நேற்று முதல் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் பல பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னை முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டு கல்வி வரலாற்றிலே பள்ளிகளுக்கு மழை காரணமாக ஜூன் மாதம் விடுமுறை அளிக்கப்படுவது சுதந்திர இந்தியாவில் இது 3வது முறை ஆகும். கடைசியாக 1996ம் ஆண்டு பள்ளிகளுக்கு ஜூன் மாதம் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது, 27 ஆண்டுகளுக்கு பிறகு மழை காரணமாக தமிழ்நாட்டில் ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக 1991ம் ஆண்டு ஜூன் மாதம் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பின்பு, 1996ம் ஆண்டு அதேபோன்று மழை பெய்தது. 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 5ந் தேதி பெய்த மழையில் செம்பரம்பாக்கத்தில் 251 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 184.4 மி.மீட்டரும், செங்குன்றத்தில் 152 மி.மீட்டரும், சோழவரம் 148 மி.மீட்டரும், தாமரைப்பாக்கம் 119 மி.மீட்டரும், தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் 109 மி.மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 104 மி.மீட்டரும், பூண்டியில் 100.2 மி.மீட்டரும், திருவள்ளூரில் 100 மி.மீட்டரும், திருப்போரூரில் 93 மி.மீட்டரும் பதிவாகியிருந்தது. 1991ம் ஆண்டு பதிவான இந்த மழையளவு அப்போது சென்னையை மிக கடுமையாக பாதித்தது.
1996ம் ஆண்டு:
1996ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி இதேபோல கனமழை பெய்தது. சென்னை துறைமுகம் 117 மி.மீட்டரும், நுங்கம்பாக்த்தில் 113 மி.மீட்டரும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலாங்காடு பகுதியில் 80 மி.மீட்டரும், செங்கல்பட்டில் 75 மி,மீட்டரும், திருக்கோவிலூர் 75 மி.மீட்டரும், காஞ்சிபுரம் தாலுகாவில் 75 மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 71 மி.மீட்டரும், செய்யாறில் 70 மி,மீட்டரும், உத்திரமேரூரில் 66 மி.மீட்டரும் பதிவானது. அப்போது பெய்த மழை வட தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.
1996ம் ஆண்டு 14-ந் தேதி ஜூன் மாதம் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. திருவள்ளூர் தாமரைப்பாக்கம், சோழவரத்தில் 450 மி.மீட்டர், சென்னை துறைமுகம் 348.3 மி.மீட்டர், நுங்கம்பாக்கம் 347.9 மீட்டர், செம்பரம்பாக்கம் 346 மி.மீட்டரும், பொன்னேரி 293 மி.மீட்டரும், திருவாலாங்காடு 250 மி.மீட்டர், திருவள்ளூர் 234 மி.மீட்டர், பூண்டி 231 மி.மீட்டர், செங்கல்பட்டு 225 மி.மீட்டர், உத்திரமேரூர் 201 மி.மீட்டர், ஸ்ரீபெரும்புதூர் 182 மி.மீட்டர், செய்யாறு 145 மி.மீட்டர் மழை பதிவாகியது. அடுத்தடுத்த 2 நாட்களில் கொட்டித்தீர்த்த பெரும் கனமழையால் அந்தாண்டு சென்னை தத்தளித்தது என்பதே குறிப்பிடத்தக்கது.