இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளிக்கான விற்பனைகளும், உற்சாகமும் தமிழ்நாட்டில் களைகட்டியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை:
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று அரைநாள் விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று அரைநாள் மட்டுமே இயங்கும். தீபாவளியை கொண்டாடும் விதமாக ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளி நாளான வியாழக்கிழமையுடன் சேர்த்து வெள்ளிக்கிழமையும் ஏற்கனவே விடுப்பு வழங்கப்பட்டு இருந்தது.
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை:
இந்த சூழலில், அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து நான்கு நாட்கள் விடுமுறையை கொண்டாடும் விதமாக இன்று மதியம் முதலே விடுமுறை விடப்படுகிறது. இதனால், மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வெளியூர்களுக்கு செல்வதற்கும், விடுதிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அவர்களது வசதிக்காக கடந்த திங்கள்கிழமை முதல் அரசு சார்பில் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை முதல் லட்சக்கணக்கான மக்கள் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
பட்டாசு, புத்தாடை விற்பனை அமோகம்:
மேலும், தீபாவளியை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே புத்தாடை மற்றும் பட்டாசுகள் விற்பனை சிறப்பாக நடைபெற்று வந்தது. நாளை தீபாவளி என்பதால் பட்டாசு மற்றும் புத்தாடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் வர்த்தகம் வழக்கத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், தீபாவளி சிறப்பு சலுகை என்பதால் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், தீபாவளி பண்டிகை என்பதால் ஆடு மற்றும் கோழி விற்பனையும் கோடிக்கணக்கில் நடைபெற்று வருகிறது. பிரபலமான ஆட்டுச்சந்தைகளில் ஆடு, மாடு, கோழி விற்பனை கோடிக்கணக்கில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.