தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வேளச்சேரியில் மட்டும் கடந்த வாரம் ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து அனைத்து வாக்கு எண்ணும் இயந்திரங்களும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ சென்னையில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் வாக்கு எண்ணிக்கையை எந்தவித இடையூறும் இல்லாமல் எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது? கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகளை எப்படி கடைபிடிப்பது? வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகளை எண்ணும் சுற்றுக்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று ஏற்கனவே தி.மு.க. தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.