தமிழ்நாடு எப்போதும் வடகிழக்கு பருவமழையை நம்பியே இருக்கும். தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் குறைந்த அளவே காணப்படுவது வழக்கம். ஆனால், சமீப ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை அதிகளவில் பொழிந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை:
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். நடப்பாண்டிற்கான தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கியது. தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் மழை தொடர்ந்து அதிகளவில் பெய்து வருகிறது.
இந்த சூழலில், கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இன்றைய தேதி வரை தமிழ்நாட்டில் பதிவான தென்மேற்கு பருவமழையின் அளவு குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 1.6.2024ம் ஆண்டு முதல் 17.08.2024 ( இன்று) வரை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 308.5 மி.மீட்டர் மழை பொழிந்துள்ளது.
88 சதவீதம்:
வழக்கமாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 164.4 மி.மீட்டர் மழை பொழிவு பதிவாகும். ஆனால், இந்த முறை இயல்பை விட பல மடங்கு அதிகளவு மழை பதிவாகியுள்ளது. இயல்பை காட்டிலும் 88 சதவீதம் அதிகளவு மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் தென் மாவட்ங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. மேலும் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் தருமபுரி, சேலம் பகுதிகளிலும் முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையிலும் கடந்த சில வாரங்களாக மாலை நேரங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையிலும் மழை கடந்த சில மாதங்களாக பரவலாக பெய்து வருவதால் அடுத்த சில மாதங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட நன்றாக பெய்துள்ளதால் விவசாயிகள் இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை இன்று விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.