மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், பயிற்சி மாணவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 24 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை ஒரு மணி நேரம் அனைத்து பிரிவு புற நோயாளிகள் சிகிச்சையையும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என அனைவரும் புறக்கணித்தனர்.


அப்போது மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகளில் பாதுகாவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், மருத்துவமனையில் அனைத்து வார்டுகள் தளத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும், ஒவ்வொரு வார்டிலும் அவசரகால தொடர்பு எண், காவல் நிலைய தொடர்பு எண் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



இதேபோல் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இன்று காலை 6 மணி தொடங்கி நாளை காலை 6 மணி வரை 24 மணிநேர பணி புறக்கணிப்பில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இதனிடையே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் வழக்கம் போல் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த காணப்பட்டது.


மேலும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் உள்ளதால் புறநோயாளிகளுக்கு எந்தவித சிரமமும் இன்றி சிகிச்சை அளிக்கப்படும் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் 24 மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.