தமிழ்நாட்டில் , வடகிழக்கு பருவமழையானது, இயல்பைவிட 32 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 16 சதவிகிதம் மழை:
தமிழ்நாட்டின் வானிலை குறித்து, தென் மண்டல வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது, அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் இன்று வரை பெய்த மழை அளவானது 54 செ.மீ; இந்த காலகட்டத்தில் இயல்பான மழையளவு 40 செ.மீ ஆகும். அதாவது, 14 செ.மீ இயல்பைவிட அதிகம் பெய்துள்ளது. இது இயல்பைவிட 32 சதவிகிதம் அதிகம். நேற்று மட்டும் , ஒரே நாளில் 16 சதவிகிதம் அதிகமாக மழை பெய்தது.
மாவட்டங்களை பொறுத்தவரை, 5 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும், 22 மாவட்டங்களில் அதிகமாகவும் மற்றும்13 மாவட்டங்களில் இயல்பான அளவையொட்டியும் இருந்தது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி:
நாளை அந்தமான் கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும், இது, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக கூடும். இதன் காரணமாக, வரும் 17 ,18 ஆகிய தேதிகளில் வட மற்றும் வட கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று:
13:12:2024: தென் தமிழகத்தில் அநேக இடங்களில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் தேனி, மதுரை, விருதுநகர் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்தூரில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.