விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள நீர் வடியாத நிலையில், மேலும் இரு தினங்களாக தொடரும் மழையால், மீண்டும் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், ஃபெஞ்சல் புயலால் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி கனமழை பெய்து வெள்ளக்காடானது. கனமழை வெள்ள சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், மீண்டும் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் தொடர் மழை காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள சுதாகர் நகர், கணபதி நகர், சிஸ் நகர், எஸ்.பி.எஸ். நகர், நேதாஜி நகர், பிரண்ட்ஸ் நகர் பகுதிகளில், ஏற்கனவே வடியாமல் இருந்த மழை நீருடன், இரு தினங்களாக பெய்து வரும் மழை நீர் குடியிருப்புகளில் சூழ்ந்தது. பகல் முழுவதும் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. சாலாமேடு, வழுதரெட்டி, முத்தோப்பு, தாமரைகுளம், கணேஷ்நகர், தேவநாதசாமி நகர் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மீண்டும் மழை நீர் சூழ்ந்தது..
தண்ணீரில் மிதக்கும் திண்டிவனம்!
இதேபோல், ஏற்கனவே பெய்த மழையால் காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி வகாப் நகர், இந்திரா நகர், காந்திநகர் போன்ற பல்வேறு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. தற்போது காவேரி பாக்கம் எரியில் இருந்து வரும் நீர் வீராங்குளம் ஏரி வழியாக கர்ணாவூர்பாட்டை ஓடை வழியாக கடலுக்கு செல்லும், இந்த நிலையில் தற்பொழுது திடீரென ஏரியின் மதகுப் பகுதியை உடைந்துள்ளது.
அதிலிருந்து வெளியேறிய வெள்ளநீர் திண்டிவனம் வகாப்நகர், காந்திநகர், இந்திரா நகர் போன்ற பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறத் தொடங்கி உள்ளனர். மேலும் இந்த வெள்ளநீர் திண்டிவனம் - புதுவை நெடுஞ்சாலை பகுதிகளிலும் ஓடுவதால் வாகன ஓட்டுக்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ., விபரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் 102, கோலியனுார் 46, வளவனுார் 50, கெடார் 42, முண்டியம்பாக்கம் 32, நேமூர் 47, கஞ்சனுார் 28, சூரப்பட்டு 30, வானுார் 38, திண்டிவனம் 69.50, மரக்காணம் 65, செஞ்சி 92.30, செம்மேடு 62.40, வல்லம் 55.40, அனந்தபுரம் 54.40, அவலுார்பேட்டை 86, வளத்தி 74, மணம்பூண்டி 32, முகையூர் 45, அரசூர் 68, திருவெண்ணெய்நல்லுார் 66 என மொத்தம் 1185.30 சராசரி 56.44 மி.மீ., பதிவானது.