ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  உடல்நிலை சீராக உள்ளது என தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 


சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், நேற்றைய தினம் திடீர் மூச்சுத் திணறல்  காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


முன்னதாக  2 முறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லிக்கு விமானத்தில் சென்று திரும்பிய நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும்,  இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையறிந்த அரசியல் கட்சி தலைவர்கள்  ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் குறித்து தொலைபேசியில் நலம் விசாரித்ததாக சொல்லப்பட்டது. தொண்டர்களும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.


இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீரான நிலையில் சாதாரண வார்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். அவர் நலமோடு உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.