எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த சம்பவத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். 


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜகவினர் இடையேயான மோதல் வெளிப்படையாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் பாஜக மாநில ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார்,  மாநில செயலாளர் திலீப் கண்ணன் உள்ளிட்ட பலரும் கூண்டோடு பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவுக்கு தாவினர். இதனால் பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி அக்கட்சியைச் சார்ந்த பலரும் கடுமையாக அதிமுகவை விமர்சித்தனர். 


இதற்கு அதிமுக தலைவர்களும் பதிலடி கொடுத்தனர். இதனிடையே பாஜகவினரை அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் பக்கம் இழுப்பதை கண்டித்து  கோவில்பட்டியில் பாஜகவினர் அவரது உருவப்படத்தை தீ வைத்துக் கொளுத்தினர். இது அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை உண்டாக்கியது. மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார். 


மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தொண்டர்கள் கோபப்பட்டால் பாஜக தாங்காது எனவும் சொல்ல, இதற்கு பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டியும் ட்விட்டரில் சரமாரியான விமர்சனங்களை பதிவிட்டார். இத்தகைய சூழலில்  கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே நடந்த இந்த உருவப்படம் எரிப்பு சம்பவம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் நடைபெற்றிருந்தது. 


இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், தன்னிச்சையாக நடந்து கொண்ட வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி  கட்சிக்கான அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதாக நேற்று இரவு அறிவித்தார்.  


ஆனால் இன்று காலையில் தினேஷ் ரோடி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அவர் அவருடைய பதவியில் தொடருவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் இரவில் நீக்கம் செய்யப்பட்டு காலையில் மீண்டும் சேர்க்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.