தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வுக்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக நாளிதழ்களில் தமிழக அரசுக்கு அன்பான வேண்டுகோள் என்ற பெயரில் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. அதில் “தமிழ்நாட்டில் தனியார் பேருந்து பயணிகள் போக்குவரத்தை 104 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக இயக்கிக் கொண்டுள்ளோம். தனியார் பேருந்து உரிமையாளர்கள் சுமார் 6500 பேருந்துகளை மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் இயக்கி வருவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் தான் குறைவு
ஆனால் “சமீபகாலமாக டீசல் விலை உயர்வு, கச்சா எண்ணெய் மேலும் பெருந்தொற்று காலத்தில் பயணிகள் மாற்று மற்றும் டாலர் ரூபாய் பரிமாற்றத்தின் அடிப்படையில் தினசரி விலை ஏற்றம் ஆகியவை மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று பேருந்து கட்டண உயர்வு அளித்த பொழுது டீசல் விலை லிட்டருக்கு ரூ.63 ஆக இருந்தது. தற்போது டீசல் விலை ரூ.95 ஆக, விட்டருக்கு ரூ.32 விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பேருந்து சேவை முதன்மையில் இருந்து வருகிறது. மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் பேருந்து கட்டணம் கிலோ மீட்டருக்கு 58 பைசா என்ற அளவில் மிகக் குறைந்த கட்டணமாக உள்ளது. அதேசமயம் போக்குவரத்து துறையில் உள்ள பிற பொது வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், லாரிகள், வேன்கள், சுற்றுலா மகிழுந்து ஆகியவை விலைவாசி ஏறும் போது அவர்கள் கட்டணத்தை தாங்களாகவே உயர்த்தி தொழில் செய்யும் நிலையில் உள்ளனர்.
ஆகவே இந்நிலை தொடர்ந்தால் பேருந்துகளின் நிலைமை மேலும் நலிவடைந்து, நாளடைவில் பேருந்துகளின் பராமரிப்பு தரம்தாழ்ந்து, மக்களுக்கு பயன்படாத பாதுகாப்பாற்ற பேருந்துகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் பேருந்து கட்டண உயர்வை உரிய முறையில் கோரியும், இதுவரை அரசு வழங்கவில்லை. அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான டீசல் விலை உயர்வாலும், பேருந்து அடிச்சட்டம் (Chassis), பேருந்து கூண்டு அமைத்தல் (Body Building), ஊழியர்கள் சம்பளம், உதிரிபாகங்கள், டயர் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்றவை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால் எங்களது தனியார் துறையில் 25 சதவிகித பேருந்துகள் வருவாய் இல்லாமல் இரண்டரை வருடங்களுக்கு மேலாக இயக்க முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள 75 சதவிகித பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குகிறது.
கட்டணத்தை உயர்த்த கோரிக்கை
எங்களால் பேருந்துகளை தொடர்ந்து இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பேருந்து தொழிலாளர்கள், இதனை சார்ந்த தொழிலாளர்கள் என சுமாராக இரண்டரை லட்சம் குடும்பத்தினர் உள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு அருள் கூர்ந்து தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு உரிய கட்டண உயர்வைக் கொடுத்து, பேருந்துகளை லாப நோக்கு இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் இயக்குவதற்கு ஆவண செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயருமோ என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது.