அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதற்கு, திமுக கூட்டணி கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அமலாக்கத்துறை சோதனை:
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான சூர்யா கல்விகுழும கல்லூரிகளிலும், அமைச்சரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணியின் வீடுகளிலும், துணை ராணுவ படையினரின் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டுள்ள கார்களில் எல்லாம், அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
பழிவாங்கும் நடவடிக்கை - திமுக
பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பேசிய திமுக அமைப்புச் செயலாளர் அர்.எஸ். பாரதி, ”ஜெயலலிதா காலத்தில் புனையப்பட்ட ஒரு வழக்கில் இப்போது சோதனை நடத்தப்படுவதன் நோக்கம் என்ன? பொன்முடியின் சட்ட ஆலோசகரான என்னை கூட அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 100-க்கு இரண்டு பேர் கூட குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசைதிருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக ஆட்சிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது, 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வி பெறுவது உறுதி” என பேசினார்.
திராணி இல்லாத பாஜக - காங்கிரஸ்:
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிமைப்படுத்தலாம் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. மத்திய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன, அவர்களது வீட்டில் அமலாக்கத்துறை என்றாவது சோதனை நடத்தியுள்ளதா? தமிழ் மண்ணில் தான் பாஜக தோல்வியடையும். அமலாக்கத்துறை சோதனையால் மக்களிடையே எதிர்க்கட்சியினருக்கு செல்வாக்கு அதிகமாகும். அரசியல் செய்ய தெரியாத பாஜகவிற்கு, நேருக்கு நேர் எதிர்கொள்ள திராணி இல்லை.
திசை திருப்ப முயற்சி - கே. பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறையின் சோதனை கண்டனத்திற்குரியது. இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது. அமலாக்கத்துற சோதனை மூலம் மக்களின் கோபத்திற்கு ஒன்றிய பாஜக அரசு ஆளாகும். விலைவாசி பிரச்னையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசு முயற்சிக்கிறது” என தெரிவித்துள்ளார்.