மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தலைநகரான மும்பை, இந்தியாவின் வர்த்தக தலைநகராக இருப்பது போலவே அங்கு பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் ரெட் லைட் பகுதியும் உள்ளது. 2000ம் ஆண்டுக்கு முன்பு பல போலி வாக்குறுதிகள், வேலைவாய்ப்பு என்று ஏமாற்றி பல போலி தரகர்களால் பெண்கள் ஏமாற்றப்பட்டு மும்பையில் உள்ள ரெட் லைட் பகுதிக்கு அழைக்கப்பட்டு பாலியல் தொழிலாளியாக ஆக்கப்பட்ட துயரச்சம்பவங்கள் அரங்கேறி வந்தது.

பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட தமிழ் பெண்கள்:


1989ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் இயங்கி வந்த தன்னார்வ தொண்டு அமைப்பான சவ்தான், பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்களை மீட்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கித் தரும் சேவையில் ஈடுபட்டு வந்தது. அப்போது, அவர்கள் மும்பையில் பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்களில் பெரும்பாலான தமிழக பெண்கள் இருப்பதை கண்டு, தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.


அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்த விவகாரத்தை தீவிரமாக கையாண்டார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். 1989ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி மீர்செளகத் அலி தலைமையிலான சிறந்த காவல் ஆய்வாளர்களை கொண்ட சிபிசிஐடி அணி மும்பைக்கு இதுதொடர்பான விசாரணைக்குச் சென்றது.

சிபிசிஐடி போலீஸ் அதிர்ச்சி:


அங்கு விசாரணைக்குச் சென்ற தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. மும்பையில் பாலியல் தொழில் நடைபெற்று வரும் காமாத்திபுரம், நயா சோனாபூர், சோனாபூர் பகுதிகளில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்கு மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட தமிழக பெண்கள் பாலியல் தொழிலாளாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியது மட்டுமின்றி அந்த பகுதியில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர். சில பெண்கள் அந்த பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றபோது, பாலியல் தொழில் ப்ரோக்கர்களிடம் சிக்கிக் கொண்டு சித்திரவதையை எதிர்கொண்டதும் தெரியவந்தது. விசாரணையை முடித்து தமிழ்நாடு திரும்பியதும் மீர் சௌகத் அலி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

மும்பை சென்ற தமிழக போலீஸ்:


அந்த அறிக்கையில் தமிழக பெண்கள் மும்பையில் பாலியல் தொழிலாளியாக படும் அவதி குறித்தும் அறிக்கையாக தாக்கல் செய்தார். மீர் சௌகித் அலி தன்னுடைய மூத்த அதிகாரிகளைச் சந்தித்து இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தார். இதையடுத்து, மாநில அரசு மும்பையில் பாலியல் தொழில் நடக்கும் இடங்களில் சிக்கித் தவிக்கும் தமிழக பெண்களை மீட்டு வர முடிவு செய்தது.


இதற்காக அப்போது காவல் உதவி ஆணையராக இருந்த அப்புசாமி தலைமையில் 67 காவல்துறை அதிகாரிகள் தாதர் எக்ஸ்பிரஸ் மூலம் மும்பைக்கு விரைந்தனர். அவர்களில் 22 பெண் போலீசாரும் இருந்தனர். மும்பையில் இறங்கியதும் மும்பை போலீசார் உதவியுடன் பாலியல் தொழில் நடக்கும் அனைத்து இடங்களிலும் தமிழக போலீஸ் சோதனை நடத்தினார்.


900 பெண்கள்:


மிக மோசமான, அழுக்கான வசிப்பிடத்திலும், குடியிருப்புகளிலும் தமிழக பெண்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். தமிழக போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 749 பெண்கள் மற்றும் 68 குழந்தைகள் மீட்கப்பட்டனர். தமிழக பெண்கள் மட்டுமின்றி கர்நாடக மற்றும் பாண்டிச்சேரி பெண்களையும் தமிழக போலீசார் காப்பாற்றினர்.


இவர்களில் பெரும்பாலான பெண்கள் தங்களது போலி ஏஜெண்டுகளால் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டு, மும்பைக்கு அழைத்து வரப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், வீட்டை விட்டு ஓடி வந்தவர்களையும் ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்தது.


அவர்களது குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடிமைப்படுத்தி வந்திருந்ததால், சொல்ல முடியாத இன்னல்களை இந்த பெண்கள் அனுபவித்துள்ளனர். மீட்கப்பட்ட சுமார் 900 பெண்களையும் தமிழக போலீசார் முதலில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேஜிஸ்திரேட் இந்த பெண்கள்  தங்கியிருந்த இடத்திற்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து நடந்த அனைத்தையும் கேட்டறிந்தார். பின்னர். இவர்களை தமிழ்நாடு போலீஸ் இவர்களை தமிழகம் அழைத்துச் செல்ல அனுமதித்தார்.


முக்தி எக்ஸ்பிரஸ்:


சுமார் 900 பெண்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் அழைத்து வருவது? எப்படி என்று தமிழக போலீசார் யோசித்தனர். தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி இவர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு ரயிலை இயக்க உத்தரவு வாங்கியது. இதன்படி, மும்பையில் இருந்து சென்னைக்கு மே 29ம் தேதி 1990ம் ஆண்டு மும்பையில் இருந்து சென்னைக்கு முக்தி எக்ஸ்பிரஸ் ரயில்  மீட்கப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்காக மட்டும் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டது.


நேரில் சென்று வரவேற்ற அமைச்சர்:


824 பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பாதுகாப்பிற்கு போலீஸ் அதிகாரிகளுடன் சென்னை வந்தது முக்தி எக்ஸ்பிரஸ். சென்னை வந்த அவர்களை வரவேற்க அப்போது சமூக நலத்துறை மற்றும் மகளிர் துறை அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனே நேரில் சென்றார். காவல்துறையினர் மீட்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்தது. குடும்பத்தினருடன் செல்ல மறுத்த சிலர் மற்றும் குடும்பத்தினர் ஏற்க மறுத்த சிலர் சென்னை, வேலூர், திருச்சி, சேலம் மற்றும் கோவையில் உள்ள மறுவாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களின் மறுவாழ்வுக்காக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ரூபாய் 7.18 லட்சம் நிதியுதவி ஒதுக்கினார். 1990 காலத்திலே பம்பாயில் பாலியல் தொழிலில் சிக்கித் தவித்த தமிழக பெண்கள் 900 பேரை போலீசார் மீட்ட சம்பவம் அப்போது ஒட்டு மொத்த தமிழக மக்களால் பாராட்டைப் பெற்றது.