Case On ED Officials: தமிழக போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவகாரத்தில், அமலாக்கத்துறைக்கும் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.


போலீசாரை தடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்:


அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றபோது, கடந்த 1ம் தேதி கையும் கள்வுமாக போலீசாரிடம் பிடிபட்டார். திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பிரபுவிடம் லஞ்சம் பெறும்போது தான் அவர் சிக்கினார். இதுதொடர்பான விசாரணைய்ன் நீட்சியாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் சோதனையில் ஈடுபட சென்றனஎர். ஆனால், காவல் துறையுடன் வந்த தமிழ்நாடு ஊழல் தடுப்பு அதிகாரிகளை உள்ளே விட அனுமதிக்காத அமலாக்கத்துறையினர், துணை ராணுவ படையினரை காவலுக்கு அழைத்தனர். இதனால், ஏற்பட்ட பரபரப்பு காரணமாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நிறுத்தப்பட்டனர்.


அமலாக்கத்துறை மீது பாய்ந்தது வழக்கு:


இந்நிலையில், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் மற்றும் பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


வழக்கும் - லஞ்சமும்:


சுரேஷ் பாபு மீதுள்ள சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க முதலில் 3 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட அங்கித் திவாரி, பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதனை 51 லஞ்சமாக குறைத்துள்ளார். இதில் முதற்கட்டமாக 20 லட்சத்தை கொடுத்த நிலையில், இரண்டாவது தவணையாக 20 லட்சம் கொடுக்கும்போது தான் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்தில் மறைந்து இருந்த அதிகாரிகள், அங்கித் திவாரி பணத்தை பெறும்போது அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கித் திவாரியின் ஜாமினும் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. 


முற்றும் தமிழக - மத்திய அரசு மோதல்:


அங்கித் திவாரி லஞ்சம் பெற்றதில் அமலாக்கத்துறையை சேர்ந்த பல மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த வழக்கில் தமிழக காவல்துறை அதீத ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே, வருவாய்த்துறை மற்றும் அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை ஆளும் பாஜக மிரட்டி வருவதாக காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சட்டி வருகின்றன. இந்த சூழலில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை தமிழக காவல்துறை கைது செய்ததோடு, பல்வேறு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்துள்ளது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து முற்றி வருகிறது.