RSS Rally: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி.. எப்போது, எத்தனை இடங்களில் தெரியுமா?

ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி செல்ல தமிழ்நாட்டில் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

Continues below advertisement

ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி செல்ல தமிழ்நாட்டில்  காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டில் 45 இடங்களில் பேரணி நடைபெற உள்ளது.

Continues below advertisement

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி:

உச்சநிதிமன்ற உத்தரவை தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலத்தின் 45 இடங்களில் பேரணி செல்லவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பேரணி நடைபெறும் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கோரிக்கையும், மறுப்பும்:

தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, பேரணி நடத்த தமிழ்நாடு அரசிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோரிக்கை வைத்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு, அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடுஅரசு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அதன் முடிவில், நான்குபுறமும் சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் பேரணியை நடத்த வேண்டும் என தனிநீதிபதி உத்தரவிட்டார். அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு,  திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடத்த, நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த பிப்.10-ம் தேதி உத்தரவிட்டது. அதைதொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவு:

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரச்னைக்குரிய இடங்களில்  பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கை காப்பது  மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை  தடுப்பது நியாயமல்ல என ஆர்எஸ்எஸ் தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. அதைதொடர்ந்து தற்போது தமிழகத்தின் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணியுடன், பொதுகூட்டமும் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதைமுன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போட்டி பேரணி நடைபெறுமா?

 கடந்த முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி அறிவித்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த முறையும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போட்டியாக யாரும் பேரணி, ஆர்பாட்டங்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதோடு, சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் போலீசார் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Continues below advertisement