அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் யார் அந்த சார் என அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மாணவிக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள்  பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள மு.க.ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர்  கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.






கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.


அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்!


இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? 
#யார்_அந்த_SIR ?” என கேள்வி எழுப்பியுள்ளார். 


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டையில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனக்கூறி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அதிமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினரின் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று கரூர் தலைமை தபால் நிலையம் அருகே அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போலீசார் உடன் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.


தொடர்ந்து போலீசார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை கைது செய்து போலீசார் வேனில் அழைத்துச் சென்றனர். 


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில், அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தது. 


இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியை மீறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்து பேரணியாக நடந்து வந்தனர். முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் பேரணியாக வந்த அதிமுகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 



தொடர்ந்து காவலர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பேருந்து மூலம் அழைத்துச் சென்றனர்.