மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதலே முதன்முறையாக எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்சி அமைந்து 2 ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.



துணை முதலமைச்சர் உதயநிதி; புதிய அமைச்சர்கள் நியமனம்:


விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாகவே கட்சிக்குள் வலுவாக இருந்து வந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறிய நிலையில், பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் முடிந்த சூழலில் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இது மட்டுமின்றி தமிழக அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சர்களில் ஒருவரான செஞ்சி மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த டாக்டர் கோ.வி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று பதவியேற்பு:


மேலும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி ஓரிரு தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவருக்கும் அமைச்சராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசருக்கும் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கான பொறுப்புகள் இதுவரை ஒதுக்கப்படவில்லை.


தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். சென்னை,  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய அமைச்சர்களுக்கு மதியம் 3.30 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

அமைச்சர்கள் அதிரடி மாற்றம்:


மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ள செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்துறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த அமைச்சர் பொன்முடி உயர்கல்வியில் இருந்து வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த சி.வி.மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.


ஆதிதிராவிட அமைச்சர் கயல்விழி மனிதவள மேம்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


சட்டமன்ற தேர்தல்:


அமைச்சரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றம் பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் அமைச்சரவையில் இந்த அதிரடி மாற்றத்தை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.


அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் அரசு கொறடவாக நியமிக்கப்பட்டுள்ளார்.