தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கடந்த ஓரிரு தினங்களாகவே தகவல்கள் வெளிவந்த நிலையில் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த நாசர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


அமைச்சர் ஆனார் டி.ஆர்.பி.ராஜா:


தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியானது முதலே தமிழ்நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது.


இந்த நிலையில், அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படும் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. அமைச்சரவையில் பெரியளவில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், அமைச்சர் நாசரின் பதவி மட்டும் பறிக்கப்பட்டுள்ளது.


நாளை மறுநாள் பதவியேற்பு:


முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமாகிய டி.ஆர்.பி.ராஜாவிற்கு தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக அமைச்சராக தேர்வாகியுள்ள டி.ஆர்.பி.ராஜாவிற்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அமைச்சராக தேர்வாகியுள்ள டி.ஆர்.பி.ராஜா நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவையில் நடக்கும் 3வது மாற்றம் இதுவாகும். அதேபோல, மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் நீக்கப்படும் முதல் நபராக நாசர் உள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா பிரதிநிதி இல்லை என்று நீண்டநாட்களாக டெல்டா தரப்பினர் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், டெல்டா பிரதிநிதியாக தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார் டி.ஆர்.பி.ராஜா.


துறைகள் மாற்றப்படுமா?


மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் முதன்முறையாக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றதே முதல் மாற்றம் ஆகும். இரண்டாவதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.


தி.மு.க.வின் இரண்டு ஆண்டுகள் ஆட்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், அமைச்சரவையில் நிகழ்ந்துள்ள 3வது மாற்றம் இதுவாகும். புதியதாக அமைச்சராக தேர்வாகியுள்ள டி.ஆர்.பி.ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டி.ஆர்.பி. ராஜா பதவியேற்கும் நாளில் தமிழ்நாடு அமைச்சரவையில் பல முக்கிய அமைச்சர்களின் துறைகளில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


குறிப்பாக, மூத்த அமைச்சரான துரைமுருகன் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும், அடுத்தடுத்து ஆடியோ வெளியாகி நெருக்கடியை எதிர்கொண்ட பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் தற்போதுள்ள நிதித்துறை தங்கம்தென்னரசுவிற்கு ஒதுக்கப்படலாம் என்றும், தங்கம் தென்னரசு தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க: CM visit to Japan: சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 23-ம் தேதி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்: ப்ளான் இதுதான்!


மேலும் படிக்க: Villupuram: மரக்கன்றுகளை காப்பாற்ற 60 அடி ஆழ கிணற்றில் நீர் எடுக்கும் கிராம மக்கள் - இந்த நிலைக்கு என்ன கரணம் ?