தமிழ்நாட்டில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.


எஞ்சியுள்ள 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  இருப்பினும், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகிரித்து வருகிறது.  


முன்னதாக, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழ்நாடு  அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்தார்.  




இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நாடு முழுவதும் இதுவரை 45 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு 48 பேருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.  அவர்களில் 20 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.  இந்தியாவில் டெல்டா ப்ளஸ்  வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிகமிருக்கும் மாநிலங்களாக மகராஷ்டிராவும் தமிழ்நாடும் உள்ளன.


டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவியுள்ள மாநிலங்களில் மாநில அரசுகள் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம்  அறிவுறுத்தியுள்ளது. ‘மக்கள் கூடுவதைத்  தவிர்க்க வேண்டும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்போர் இருக்கும் பகுதிகளை மற்றவர்கள் அணுகாதபடி தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் அது கூறியுள்ளது.


டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய பகுதிகளில் ஒன்றிய அரசு அறிவுறுத்தியபடி கூடுதலான கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு விதித்துள்ளதா என்பது தெரியவில்லை.  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுக்குப் பிறகு 14 மாவட்டங்களில் தோற்று அதிகரிப்பது மிகவும் கவலைக்குரியதாகும். கொரோனா மூன்றாவது அலை எப்போது தாக்கும் என்பது தெரியாத நிலையில் இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று  தெரிவித்தார். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முறையாக B.1.617.2 டெல்டா கொரோனா (டெல்டா), இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta),  பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), ஆகிய நான்கு மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது. 




ஆல்பா கொரோனா வகையை விட புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று அதிகமாக பரவக்கூடியதன்மை கொண்டதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உலகளவில், 85 நாடுகளில் குறிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்களிடம் அதிகமாக பரவி வருகிறது என்றும் தெரிவித்தார். 


தமிழ்நாட்டில், தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 5,59,05,707 ஆக உள்ளது. தற்போதுவரை, கிட்டத்தட்ட 4 சதவிகித பயானளிகளுக்கு மட்டுமே இரண்டு தடுப்பூசி டோஸ்களும் நிர்வகிக்கப்பட்டுள்ளன. இதே வேகம் தொடர்ந்தால், மாநிலத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்றும் கணக்கிடப்படுகிறது.  


மேலும், படிக்க:


பொதுப்போக்குவரத்து இயக்கப்பட்ட பின்பு அதிகரித்துள்ளதா கொரோனா தொற்று எண்ணிக்கை?